Saturday, July 20, 2013

மயிலானவளுக்கு........,


மயிலானவளுக்கு..............

                     என்ன பண்ணிட்டு இருக்க மயிலு?நான் கேக்குறது உனக்கு கேக்குதா?

                                         இப்படித்தான் இப்போதெல்லாம் நீ என்ன பண்ணிட்டு இருக்க?என்ன நினைச்சிட்டு இருப்ப?னு உன்னைப்பற்றிய நினைவுகளுடனே நேரம் நகர்கிறது.எதிர்பார்த்த பிரிவுதான்,ஆனால் நான் விரும்பாதது நீ விரும்பியது.பின்னே பேறு காலத்தில் தாயாகப்போகும் காலங்களில் தாயின் அரவணைப்பிலிருக்கதானே நினைப்பாய்.நீ உடனிருக்கும்போது அப்போதைய வாழ்க்கைதான் வாழ்ந்தோம்.கடந்து சென்றவைகளைப்பற்றி நினைத்துப்பார்க்க நேரமில்லை இப்போது அதற்கான நேரம்.........


                           நான் ஏன் உன்னை மயிலென்று அழைக்க ஆரம்பித்தேன் என நினைத்துப்பார்க்கிறேன்.உனக்கும் எனக்குமான பரிமாறல்கள் எல்லாமும் ஒரு மாலை நேர மழைக்குப்பின்னான இதமான தேநீரின் முதல் மிடறினைப்போல மெல்ல,மெல்ல அந்த கணத்தினை நோக்கி பயணப்பட துவங்குகிறேன்.



     மணமுடித்து என்னுடன் வருகையில் உன் அப்பா,அம்மாவை அணைத்தழுத பொழுது இல்லாத உணர்ச்சி வளையலணிந்து என் கையழுத்தி போய்டு வரேன் என சொன்ன போது தாயுமான உணர்வளித்தாய்.இங்கேயே இருந்து விடேன் என்ற போது ,"ம்ம்ம்,அஸ்கு ,புஸ்கு எங்க அப்பா அம்மா எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க,நீயும் கொஞ்ச நாள் படு" என சொல்லி கண்ணால் விடை பெற்று சென்றாய்.


        அன்றொருநாள் பரிசோதனைக்கு மருத்துவமனை போயிருந்தபோது மருத்துவர் வர சற்று நிறையவே தாமதமாக அத்தனை பேர் இருக்க என் தோளில் சாய்ந்து உறங்கிப்போனாய்.ஆனால் அன்று என்னைப்பொறுத்தவரை நீயும் நானும் மட்டும் அங்கே.இவன் எனக்கானவன் என்ற உரிமையில்,திமிருடன் உறங்கிய உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.காதலில்,
                                                               
தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
                                                      சிறகு முளைக்கும்
எனக்கு  முளைத்தது அன்று.



எப்போதாவது கோபமாக இருக்கும் போது உன்னை மயிலுக்கு லு'னாவுக்கு பதிலாக று'னா போட்டு வெடுக்கென்று போடி என்பேன்.அப்போது ஏதும் சொல்லாமல் மகிழ்வோடு பகடி செய்துகொண்டிருக்கையில் கோவமா இருக்கும்போது மயிலுன்னு கூப்பிடாம வேற மாதிரி கூப்பிடுவியே அந்த மாதிரி கூப்பிடு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பாய்.பொய்யாய் கோபித்து உன் ஆசையை நிறைவேற்றுவேன் செல்லமாய் அணைப்பாய்.நினைத்துப்பார்க்கையில்.....
                
உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
                        கனவு காணச் சொல்லும்     

பள்ளிக்காலங்களிலே உன்னை நானும்,என்னை நீயும் அறிவோம்.இறுதி வரை இணைந்தே வாழப்போகிறோம் என அப்போதே அறியோம்.அப்பவே மயிலென்று உன்னை அடையாளப்படுதிக்கொண்டேன் என்னுள்.அந்த சமயத்தில் அதைப்பற்றியெல்லாம் உன்னிடம் சொல்லியிருந்தால் இப்படி இணைந்திருப்போமா என்பது ?யே.அப்போது என்னிடத்திலும் காதலில்லை உன்மேல்,ஆனால் நீயென்றால் கொஞ்சம் சிறப்பு எனக்கு.சேலத்து மாம்பழம் விளைவது அங்கல்ல,ஆனால் அந்த பெயர் மாம்பழத்திற்கு சிறப்பு அதைப்போல் நீ எனக்கு.
எதற்கு இருக்கிறார்கள் நண்பர்கள் இதையெல்லாம் சொன்னால் ஏதாவது கட்டுக்கதை கட்டி முதுகில் டின்னையும் கட்ட வைத்துவிடுவார்கள்.

கல்லூரியில் கேட்கவே தேவையில்லை ஈரை பேனாக்கி பேனை பெரியப்பாவாக்கினார்கள் நண்பர்கள்,ஆம் நமக்குள்ளிருந்த நட்பினை பேசிப்பேசியே காதலாக்கிவிட்டார்கள் காதல் பக்குவமறியாது என்பர்.அதை எனக்கு பொய்யாக்கி காட்டினாய் நீ.இணைந்து வாழத்தான் காதல் அதற்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணு என சர்வ சாதாரணமாக ஒற்றை வார்த்தையில் எனக்கு எல்லாம் புரிய வைத்தாய்.அதுவரை காதல் என்னுள் .........
                      
ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
                        வேடிக்கை பார்த்திருந்தது

 ஹார்மோன்களை அடக்கி,ஹார்மோனிய வாசிப்பை நிறுத்தி சிந்திக்க வைத்தாய்.பின்னொரு நாள் உன் அப்பாவிடம் வந்து என் மயிலை என்கிட்டே குடுத்துடுங்க என உரிமையோடு கேட்ட போது  மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டியபோது நீ என்னைப்பார்த்து புன்னகைத்தபோது 
கவிதைகளாய்  சொல்ல தோன்றியது,உங்கப்பாவைபார்த்ததும் எங்கே யோசிக்க ஆரம்பித்து விடுவாரோ என எண்ணி பிறகு அதையெல்லாம் உன்னிடம் சொல்லிக்காண்பித்தேன்.


'உன்னை எப்ப இருந்து மயிலுன்னு கூப்பிட ஆரம்பிச்சேன்னு உனக்கு தெரியுமான்னு உன்கிட்ட ஒரு முறை(நீ தப்பாதான் சொல்லுவனு தெரிஞ்சே) கேட்டப்போ,எங்க அப்பா ஒத்துக்கிட்டப்பறம் நாம பேசிட்டு இருக்கும்போதுனு சொன்ன.அன்னிக்கு தான் உன்கிட்டயே சொன்னேன்.இது நாம பனிரெண்டாவது படிக்கறப்போவே நான் உனக்கு வைச்ச பேர் அப்படின்னு.அடப்பாவி இப்போத்தான் எனக்கும் நியாபகத்துக்கு வருது என இணைந்தே அந்த தருணத்தை நினைவு கூர்ந்தோம்.


          அது விலங்கியல் பாடவகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு விலங்கினத்தின் அறிவியல் பெயர் சொல்லி அந்த விலங்கினத்தில் பெயரை கேட்டு வந்தார் என் முறை வந்தது பாவோ க்ரிஸ்டேட்ஸ்(Pavo cristatus) இது எந்த உயிரினத்தின் பெயர் என்றார்.இந்தியாவில் இந்த பறவை மிகச்சிறப்பு என குறிப்பு வேறு தந்தார் வகுப்பறையில் அனைவரது தூக்கத்தை கலைத்த பதிலாக காக்கா என்றேன்.நீயும் சிரிக்கிறாயா என பார்த்த போது ஏதோ ஒரு புத்தகத்திலிருந்த மயில் படத்தை காட்டினாய்.இது போதாதா.வேறேதும் காரணமும் வேண்டுமா?

             இதை சொன்னதில் இருந்து எனக்கான செல்லப்பெயரையும்  அந்த நிகழ்விலிருந்தே வைத்தாய் அந்த ஆசிரியர் உன்னைப்போய்  Bos gaurus    -  ன் பெயர் என்ன என்றா கேட்க வேண்டும்,அதற்கு உனக்கு விடை தெரியாமல் என்னைப்பார்க்க,என் நேரம்.......ம்ம்ம்.இதற்கு நான் அந்த பெயரை உனக்கு வைக்காமலே இருந்திருக்கலாம்.

இனி  இப்படித்தான் நீ வரும் வரை,எத்தனை கடிதங்கள் எழுதப்போகிறேனோ?நீயும் இப்படித்தான் எழுதிகொண்டு,நினைதுக்கொண்டிருக்கிறாயா?ஓ!உனக்குத்தான் பகிர்ந்துகொள்ள ஒரு உயிர் இருக்கிறதே.பகிர்ந்து கொள்.நீ என்னென்ன நினைக்கிறாயென
நான் பிறகு கேட்டு தெரிந்துகொள்கிறேன்.அது வரை
                        

ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
                           காத்திருக்கச் சொல்லும்
 உன் காதல்.

ப்ரியமுடன்
கோகுல்.
 

 
மேலும் வாசிக்க "மயிலானவளுக்கு........,"

Tuesday, July 9, 2013

பல"சரக்கு"கடை 13- 09/07/2013




நோ கமெண்ட்ஸ்

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என சில பழைய சஞ்சிகைகளில் துணுக்குறும் புகைப்படங்கள் இருக்கும்.அந்த வகையில் நோ கமெண்ட்ஸ் சொல்ல வைக்கும் சமீபத்திய செய்திகள் சில.

                                                           [ இதுக்கும் நோ கமெண்ட்ஸ்]

#மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர்.

# எங்கள் கட்சியின் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. அதனால் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்-மனித நேய மக்கள் கட்சி&டாக்டர் கிருஷ்ணசாமி.

# 3900 ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உதவிகள் போகவில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது-விஜய்


எரிகிற வீட்டில்...

எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம் என நிறைய பேர் கேட்பதுண்டு,இந்த கேள்வி கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட உத்ராகண்ட்டில் நிகழ்ந்த,அது தொடர்பான  சம்பவங்களை பார்க்கும் போது சற்று சத்தமாகவே கேட்கிறது.உட்சம்-சில ஆந்திர மக்களை மீட்டு அழைத்து செல்வதில் தெலுங்கு தேசத்துக்கும் ஆந்திர காங்கிரசுக்கும் குடுமிப்பிடி சண்டை.அதிர வைக்கும் உணவு,தண்ணீர் விலை,கொள்ளை,பாலிய; துன்புறுத்தல்கள் என ஊடகங்களில் வந்து கொண்டிருக்கையில் உரக்க கத்தி கேட்டுக்கொள்ளுங்கள் அந்த கேள்வியை
எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம்????????????????

டாக்டர்  பட்டம் தேடிப்பாத்து.............,

"டாக்டர் பட்டமா?எனக்கா? நான் என்னத்த பண்ணிட்டேன்னு என்கிட்டே வந்திருக்கீங்க.நாட்டுல எத்தனையோ விஞ்ஞானிகள்,அறிவாளிகள்,படிப்பாளிகள் இருக்காங்க அவங்களுக்கு பொய் கொடுங்க.எனக்கு குடுக்க நான் ஒத்துக்கவே மாட்டேன்"-காமராஜர்

# நீங்க யாரையாவது நினைச்சு படிச்சா நான் பொறுப்பேற்க முடியாது.

 
விளையாட்டா.....


பெடரர்,நடால்,ஷரபோவா,செரீனா ஆரம்ப சுற்றுகளிலே நடை கட்ட எதிர்பார்ப்பு சற்று குறைவாகத்தான் இருந்தது,ஜோகோவிச்சும்,லிசிக்கியும் அவ்வப்போது பார்க்க வைத்தார்கள்,இறுதியில் நான் எதிர்பார்த்திருந்த இருவரும் கோட்டை விட்டனர்,.இந்த நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவில் வந்தது ஆஸ்திரேலிய ஓபன்-2010 இறுதியில் அவர் தோற்றபோது பேச இயலா தருணம்,

https://www.youtube.com/watch?v=ZuSzqcdJkeM

அதற்கு முந்தைய ஆஸ்திரேலிய ஓபன்-2009-ல் பெடரர் தோற்றிருப்பார் அவரது தருணத்தையும் நினைவு கூர்ந்து ஜோகர் பேசியிருப்பார். நெகிழ்வான தருணங்கள்.,
https://www.youtube.com/watch?v=dCjw0Unm8OY
நேரமிருந்தால்  பாருங்கள்.


*கிரிக்கெட்  நான் பார்க்க ஆரம்பித்த காலங்களில் இந்திய அணியில்சிலர் முரட்டு மீசையுடன்இருப்பார்கள்,மீசையுடன் ஸ்ரீநாத்,கும்ப்ளே பந்து
,வீசுவதும்,அசாருதீன் பேட்டிங்( இதை டைப் செய்யும் போது பெட்டிங்னு தான் வந்தது முதலில்-காரணம் நானறியேன் பராபரமே) செய்வதும் நம்ம அப்பா,மாமா,சித்தப்பா விளாட்ற மாதிரி ஒரு ஃபீலிங் குடுக்கும்,அப்றமா ரொம்ப நாள் மீசை வழித்த அங்கிள்ஸ் விளையாடும் காலத்தில் மீசை முறுக்கி வந்திருக்கிறார்கள் ஷிகர் தவானும்(இப்போ இவர் இந்தியா டீம்ல ஸ்டிக்கர் தவான்),ரவீந்தர் ஜடேஜாவும்(மன்னிக்கவும்) சர்-ஐமறந்துவிட்டேன்.Take care that your mustache from soil( no bad words).

எனது ஆலோசனை

பதிவர் சந்திப்பு-2013ற்காக  ஆலோசனக்கூட்டங்கள் ஆர்வமாக முழுமூச்சில் நடந்து வருகின்றன,தூரம் காரணமாக கலந்து கொள்ள முடிவதில்லை.எனது யோசனை ஒன்று-வாய்ப்பிருந்தால் பரிசீலிக்கவும்.கடந்த வருடம் மூத்த  பதிவர்களுக்கு விருதளித்து பெருமைப்படுத்தியது போல,இவ்வருடம் அவர்களோடு சேர்த்து சிறந்த இளம்பதிவர் (அ) பதிவர்கள் விருது(கள்) வழங்கலாம் என்பதே அது.கடந்த வருடம் யூத் பதிவர் சந்திப்பில் எனக்கு வழங்கினார்கள்.இந்த வருடம் அது போல் இதுவரை யூத் பதிவர் சந்திப்பு நிகலாததால் இது எனக்கு தோன்றியது.பதிவுலகில் பதிவுகள் குறைந்து வரும் நேரத்தில் இளம் பதிவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Facebook-ல் பகிர்ந்தவை

# நாம இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கும் போது இந்த உலகம் நம்மைப்பாத்து சொல்வது எல்லாந்தெரியும் மூடிட்டு படுங்கடா நொன்னைங்களா

# மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும் பல்டியில் எத்தனை வகை உள்ளது என்று.

போத்தீஸ் மாதிரியான கடைகளில் இப்போ அன்பளிப்பா(?) மரக்கன்றுகள் கொடுத்துட்டு வராங்க,நல்ல விசயம் தான்,ஏதாவது குறை சொல்லலைன்னா நமக்குத்தான் தூக்கம் வராதே,

                                                              [நம்ம வீட்டு தக்காளி]

குறை என்னான்னா,இப்படி ஏப்ரல்,மே,ஜூன்ல கத்திரி வெயில் பட்டய கிளப்புற காலங்களில் கொடுக்காம மழை கண்ணைக்காட்டும் காலங்களில் கொடுத்தால் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஏன் சொல்றேன்னா வீட்ல இருக்க செடிங்களே ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போயிடு வந்து பாத்தா வள்ளலாரை நியாபகப்படுத்துதுங்க.இதுல புதுசா வைக்குற செடி தாக்குப்பிடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்.அதனாலதான்....‎#அப்பாடா இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்.( இப்போ மழை பெய்யுது இவங்க ஆடி,ஆவணினு அவங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க)



நட்புடன்
ம.கோகுல் 

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 13- 09/07/2013"