Tuesday, December 18, 2012

மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?

கடந்த பதிவின்(வாசிக்காதவர்கள் அழுத்தவும்) தொடர்ச்சியாக அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் பற்றி எழுதியதை பதிவிடுவதற்குள் நிகழ்ந்திருக்கிறது சென்னையில் மாநகரபேருந்து விபத்தில் சிக்கி நான்கு மாணவர்கள் பலியான சம்பவம்.சொல்லப்போனால் இந்த தொடர்பதிவு எழுதுவதற்கான எண்ணம் உருவானது இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சிதான்.


கடந்த மாதம் ஊருக்கு(இளம்பிள்ளை-இராசிபுரம்) சென்றிந்த போது ஓரு நகரப்பேருந்தில் பயணித்தபோது உதித்தது தான் இந்த எண்ணம்.அது எல்லோருக்கும் தெரிந்த பாஷையில் பீக் அவர். பேருந்து கிளம்பி இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குள் பேருந்து நிரம்பி வழிந்தது.ஒவ்வொரு நிறுத்தத்திலும் கிட்டத்தட்ட இருபது மாணவ மாணவிகள் கூடவே நான்கைந்து பயணிகள்.எள் போட்டால் எண்ணெயாக இறங்கும் அளவுக்கு கூட்டம் என மிகையாக சொன்னாலும் அது சரியாகத்தான் தோன்றுகிறது.

பலர் நினைப்பது போல உள்ளே இடம் இருந்தும் படியிலிருந்து உள்ளே செல்ல மறுக்கும் மாணவர்களில்லை அவர்கள்.சொல்லப்போனால் இரண்டாம் படி வரை சில மாணவிகளே நின்றுகொண்டு வந்தனர்.முன்புற படிக்கட்டிலும் பின்புற படிக்கட்டிலும் சுமார் பத்து பேர் தொங்கிக்கொண்டு வந்தனர்.ஒவ்வோர் நிறுத்தத்திலும் இறங்கி வலிக்கும் கைகளை தேய்த்து ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.


பயணிகளே ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏங்க ஸ்டாப்பில நிறுத்துறீங்க,இவ்ளோ கூட்டமா இருக்குல்ல,நிறுத்தாம போங்கனு சொல்றாங்க,கண்டக்டரோ நீங்க இப்டி சொல்றீங்க ஸ்கூல் டைமுக்கு இதாங்க பஸ்சு இத விட்டா அவங்க ஸ்கூல் போக முடியாது,நிறுத்தாம போனா அப்புறம் அடுத்த சிங்கிள் வரும் போது பஸ்ஸை மறிச்சு கலாட்டா பண்ணுவாங்க,இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோனு புலம்பினார்.
  

எப்படி பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து(எல்லா ஊரிலும்) கிட்டத்தட்ட பத்திலிருந்து பதினைந்து கி.மீ பயணம் செய்கின்றனர் மாணவர்கள்.தனியார் பள்ளி வாகனங்களுக்கு மட்டும் எத்தனையோ விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன( சிறுமி ஸ்ருதி மரணத்திற்கு பிறகே).ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பஸ்பாஸ் வழங்குவதுடன் நின்றுவிடுகிறது அரசின் கடமை.


ஒவ்வொரு வழித்தடத்திலும் பள்ளிநேரத்தில் எல்லா பேருந்துகளிலும் ஏதாவது பத்து,இருபது மாணவர்கள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்ன தான் தீர்வு? எல்லா வழித்தடங்களிலும் உள்ள பள்ளிகளில் எத்தனை இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு பள்ளி நேரங்களில் அந்தந்த வழித்தடங்களில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கலாம்.புதுச்சேரியில் இதைப்போன்ற ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.அதாவது பல வழித்தடங்களில் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபத்தைந்து கி.மீ வரை பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கென ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதில் அரசுப்பள்ளி மட்டுமல்லாமல்தனியார் பள்ளி,கல்லூரி,பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ மாணவர்கள் உட்பட அந்த வழித்தடத்தில் உள்ள எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அடையாள அட்டையை காட்டிவிட்டு ஒரு ரூபாய் கட்டணத்தில் போய் வரலாம்.இது மாதிரி ஒரு முயற்சியை தமிழகத்திலும் பரிசீலிக்கலாமே .....  

மாணவர்களை தண்டிப்பதோ,பேருந்து ஓட்டுனர்கள்,நடத்துனர்களை வஞ்சிப்பதையோ தவிர்த்து இதைப்போன்ற விசயங்களைப்பற்றி சிந்திக்கலாம்.இப்படியெல்லாம் செய்தும் படியில தான் தொங்குவேன் அப்டினு அடம புடிக்கறவங்கள "புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்"

16 comments:

Unknown said... Reply to comment

நல்ல யோசனை கோகுல்! அரசு கவனிக்குமா

செங்கோவி said... Reply to comment

நல்ல பதிவு கோகுல்..நானும் இதுபற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன்; நேரம்ன்மையால் முடியவில்லை.

ஏதோ மாணவர்கள் படியில் தொங்குவதை விரும்பிச் செய்வதாக கோர்ட்/அரசு நினைப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

புதுச்சேரியில் திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழகமும் முயற்சிக்கலாம் ..

CS. Mohan Kumar said... Reply to comment

Very good suggestion.

rajamelaiyur said... Reply to comment

உண்மைதான் ... சில ஓட்டுனர்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே தான் தங்கள் வேகத்தை காட்டுகிறார்கள் .. மாணவர்களும் , பொது மக்களும் , அரசும் ஒன்று இணைந்தால் தான் இதை தடுக்க முடியும்

semmalai akash said... Reply to comment

அருமையான கருத்துகள், இதெல்லாம் நடைமுறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்.

சீனு said... Reply to comment

நல்ல பதிவு கோகுல், படியில் தொங்குவதற்கு எல்லாருக்குமே ஆர்வம் தான் இருந்தும் வேறு வழியே இல்லாமல் தொங்குவோர் தான் அதிகம், அரசாங்கம் இதைத் தடுக்க ஏதேனும் வழி செய்ய வேண்டும்

கோகுல் said... Reply to comment

@புலவர் சா இராமாநுசம்
விரைவில் கவனிக்க வேண்டும்

கோகுல் said... Reply to comment

@செங்கோவி
எனக்கும் அதே பிரச்சினை தான் அண்ணே!அதனால் தான் அடிக்கடி பதிவிட முடியல.

கோகுல் said... Reply to comment

@இராஜராஜேஸ்வரி
இங்கேயும் சில குறைபாடுகள் இருக்கின்றன.ஆனாலும் சிறப்பான திட்டம் தான்.

கோகுல் said... Reply to comment

@மோகன் குமார்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@semmalai akash
@சீனு

கருத்துகளுக்கு நன்றி.

Anonymous said... Reply to comment

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

Unknown said... Reply to comment

சூப்பர் சார் முயற்சிக்கலாமே

Avargal Unmaigal said... Reply to comment

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

பூந்தளிர் said... Reply to comment

ஆமாங்க இதெல்லாம் நடைமுறைக்கு வந்தால் எவ்வளவோ நல்லாதான் இருக்கும். சம்மந்தபட்டவங்க காதில் விழனுமே.

கவியாழி said... Reply to comment

ஜாலிக்காகத்தனே